தர்மபுரி அருகே பி.காம்., படித்துவிட்டு ஆங்கில மருத்துவமுறையில் சிகிச்சை அளித்துவந்த மோசடி நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, ஜக்கமசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, அமானி மல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எம்.பி.பி.எஸ். படிக்காத ஒருவர் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்துவருவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷனிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆட்சியரின் உத்தரவின்பேரில், பாலக்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாரண்ட அள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜூலை 7ஆம் தேதி ஆய்வுசெய்தனர்.
கரகூர் கிராமத்தில் உள்ள ஒரு மருந்து கடையை ஆய்வுசெய்தபோது, கடையின் உள்புறம் கிளினிக் அமைத்து, ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்துவந்த நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த நபர் பெரிய கும்மனூரைச் சேர்ந்த சண்முகம் (45) என்பதும், அவர் பி.காம்., பட்டதாரி என்பதும், எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்துவந்த மோசடி நபர் என்பதும் தெரியவந்தது.
கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் அதிக செலவாகும் என்றும், தன்னிடம் வந்தால் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதாகவும் கூறி கிராம மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்துவந்துள்ளார். மருத்துவக் குழுவினர் அளித்த தகவலின்பேரில் மாரண்டஅள்ளி காவல் நிலைய காவல்துறையினர் அவரை கைதுசெய்தனர்.