Skip to main content

பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Published on 15/12/2017 | Edited on 15/12/2017

பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! 
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
 
சென்னை பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தெரு நாய்கள் காப்பகங்களை மிருக வதைத் தடைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி பராமரிக்கும்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிடக் கோரி அல்மைட்டி விலங்குகள் நல அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தெரு நாய் தொல்லை தொடர்பாக புகார் வந்தால் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் சென்று தெரு நாய்களை பிடித்து, அவற்றுக்கு கருத்தடை செய்வதுடன், ரேபிஸ் நோய் தடுப்பு மருந்து கொடுத்து, பின்னர் மீண்டும் அதே இடத்தில் விடவேண்டும் என விதி உள்ளதை மீறும் வகையில் சென்னை மாநகராட்சி நடந்து கொள்வதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக சென்னை பேசின் பாலம் அருகில் உள்ள நாய்கள் காப்பகத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள்  முறையாக பராமரிப்பு இல்லாமலும், உணவு அளிக்கப்படாமலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை பேசின் பாலத்தில் அமைந்துள்ள நாய்கள் காப்பகத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி  சென்னை மாநராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்