விழுப்புரம் மாவட்டத்தில் சமீப காலமாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், புகையிலை பொருட்கள், கலப்பட மதுபாட்டில்கள் தயாரிப்பு இப்படி பல்வேறு விதமான சட்டத்திற்குப் புறம்பானதும் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் விற்பனை அதிகரித்து வருகிறது.
இதனடிப்படையில் நேற்று மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் திண்டிவனம் பொறுப்பு டிஎஸ்பி பாலச்சந்தர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார் அருள்தாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை திண்டிவனம் நகரில் பல்வேறு கடைகளில் திடீர் சோதனை நடத்தியது. கிடங்கல் பகுதியில் நடத்திய சோதனையின்போது ஒரு குடோனில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது.
அங்கிருந்து சுமார் 150 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூபாய் 2 லட்சம் என போலீசார் தெரிவிக்கின்றனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை ஈடுபட்டதாக கூறி சண்முகம் மற்றும் குமார் மகன் முகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் குமாரை தேடி வருகின்றனர். போதைப்பொருட்கள் நடமாட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. காவல்துறையும் அவ்வப்போது போதைப்பொருட்கள் பறிமுதல் செய்வதும், அது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதும் தொடர் சம்பவங்களாக தொடர்கிறது.