பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், வங்கிக் கடன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடன் தவணை தொகையை (இஎம்ஐ) திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும். வங்கிக் கடன் தவணைக்கான அபராத வட்டியை வசூலிக்காமல் மக்களின் வாழவாதாரத்தை மீட்க முன்வர வேண்டும். நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்பதை உணர்ந்து அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். இதுவரை நேர்மையான பணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும். பேரிடர் காலத்தில் வாடிக்கையாளர்களை வங்கிகள் வாட்டி வதைக்க நினைப்பது மனிதாபிமானம் அல்ல. ரூபாய் 57,128 கோடி உபரித் தொகையை மத்திய அரசுக்கு கொடுக்கும் ரிசர்வ் வங்கியால் எளிய மக்களுக்கு உதவுவது கடினமல்ல' இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.