Skip to main content

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை...! -மாறுவேடத்தில் போலீசார்

Published on 27/12/2020 | Edited on 28/12/2020
Ban on New Year celebration ...!

 

கரோனா வந்த பிறகு மக்களின் வாழ்வியல் சூழலே மாறுபட்டு விட்டது. ஒவ்வொரு வருடமும் ஆங்கில மாதம் ஜனவரி 1-ந் தேதிக்கு முதல்நாள் இரவு புத்தாண்டை வரவேற்க மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். டிசம்பர் மாதம் 31 - ந் தேதி இரவு பொது இடங்களில் கூடி புத்தாண்டை உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வரவேற்பார்கள். சிலர் பெரிய பெரிய ஹோட்டல்களில் நடனமாடி புத்தாண்டு கொண்டாட்டத்தை நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக இது போன்ற கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது.

 

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை வழக்கமாக டிசம்பர் 31-ந் தேதி இரவில் பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டை உச்சமாக வரவேற்பார்கள். இதைப்போல் கேளிக்கை விடுதிகள் ஹோட்டல்கள் போன்றவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். ஆனால் இந்த வருடம் பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றாகத் திரண்டு புத்தாண்டு கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் கேளிக்கை விடுதிகள் ஹோட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் மதுபானக் கடைகள், மதுபான பார்கள் மூடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் கண்கானிப்பாளர் தங்கதுரை கூறும்போது,

 

Ban on New Year celebration ...!

 

''இந்த வருடம் கரோனா தாக்கம் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொது இடங்களில் மக்கள் ஒன்று கூட வேண்டாம். தடையை மீறிப் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கேளிக்கை விடுதிகள் ஹோட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றால் அதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுவார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புத்தாண்டு  அன்று சிலர் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவார்கள். இதை கண்காணிக்க ஆங்காங்கே போலீசார் வாகனத் தணிக்கையிலும் ஈடுபடுவார்கள். அதேபோல் கோவில்கள் வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பார்கள்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்