
பக்ரீத் பண்டிகை இன்று(17.06.2024) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, அமமுக பொதுச் செயலளார் டி.டி.வி. தினகரன் எனப் பலரும் பக்ரீத் பண்டிகை திருநாளுக்கான வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.
மேலும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களின் சிறப்புத் தொழுகை நடத்தி வழிபட்டனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக; உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக; உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக. தியாகத் திருநாள் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், “அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.