Skip to main content

அநாகரீமாக பேசிய பெண் ஜாமீன் கோரி மனு

Published on 24/10/2024 | Edited on 24/10/2024
Bail petition for woman who spoke indecently

சென்னை பட்டினப்பாக்கம் மெரினா கடற்கரைச் சாலையில் சந்திரமோகன் என்பவரும், அவருடன் இருந்த தனலட்சுமி என்ற பெண் ஆகிய இருவரும், மதுபோதையில் போலீசாரை ஆபாசமாகப் பேசியிருந்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து போலீசாரிடம் அத்துமீறிய இந்த ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கிடையே பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாகப் பேசியதாகக் காவலர் சிலம்பரசன் என்பவர் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவர் மீதும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு இருவரையும் கைது செய்ய போலீசார் தரப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனியார் தங்கும் விடுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரமோகன்,  தனலட்சுமி இருவருக்கும் தனி தனி குடும்பங்கள் உள்ள நிலையில் இருவரும் தகாத உறவில் இருந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Bail petition for woman who spoke indecently

கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் போலீசாரிடம் அநாகரீகமாக பேசிய தனலட்சுமி தனக்கு ஜாமீன் வேண்டுமெனக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். 'நான் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்; தவறுக்கு மன்னிப்பு கூறியுள்ளேன். எனவே தனக்கு ஜாமீன் வேண்டும்' என அந்த மனுவில்  தெரிவித்துள்ளார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் காவல்துறை இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்