கொடுங்குற்றம் தவிர்த்து பிற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் இடைக்கால ஜாமீன் மனுக்களை விசாரிக்கும்படி, கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், தலைமைப் பதிவாளருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலை அடுத்து, சிறைகளிலும் சமூக விலகலைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைகளில் நெருக்கத்தைக் குறைத்திட, கொடுங்குற்றம் தவிர்த்து பிற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி, அனைத்து நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்படும் இடைக்கால ஜாமீன் மனுக்களையும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான 60 நாட்கள் காலக்கெடு முடிந்தபின் தாக்கல் செய்யப்படும் சட்டப்பூர்வ ஜாமீன் மனுக்களையும் கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்கவில்லை எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கொடுங்குற்ற வழக்குகள் தவிர்த்து பிற வழக்குகளில் சம்மந்தப்பட்ட கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் கோரிய மனுக்களை விசாரிக்கும்படி, கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு, இதுசம்பந்தமாக ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.