சேலம் அருகே, கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்ட பட்டியலின இளைஞரை சாதி பெயரைச் சொல்லி, தாக்க முயன்ற வழக்கில் கைதான திமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள திருமலைகிரியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கடந்த ஜன. 26ம் தேதி இரவு 8.30 மணியளவில், அதே பகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் (22) என்ற இளைஞர் உள்ளே சென்று சாமி கும்பிட்டுள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கூழை கவுண்டர், வெங்கடாசலம் ஆகியோர் அவரை சாதியைச் சொல்லி திட்டியுள்ளனர். அதற்கு அடுத்த நாளான ஜன. 27ம் தேதி காலை கோயில் திடலுக்கு வந்த சேலம் ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், திருமலைகிரி ஊராட்சிமன்றத் தலைவருமான மாணிக்கம் முன்பு அந்த இளைஞரை ஆஜர்படுத்தி உள்ளனர்.
அப்போது அவர், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அந்த இளைஞரை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, வார்த்தைக்கு வார்த்தை ஆபாச சொற்களால் திட்டியும் உள்ளார். தாக்கப் பாய்ந்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த இளைஞரை ஊரார் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இந்த சம்பவம், காணொளி காட்சியாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. தமிழகம் முழுவதும் இந்த காணொலி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அன்றைய தினமே மாணிக்கத்தை திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்து கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
இதையடுத்து மாணிக்கத்தின் மீது இரும்பாலை காவல்நிலைய காவல்துறையினர் சாதி வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மாணிக்கம், ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (பிப். 6) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், திமுக பிரமுகர் மாணிக்கத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ஒரு மாத காலத்திற்கு திருமலைகிரி ஊருக்குள் நுழையவும் தடை விதித்தார். தினமும் காலையும், மாலையும் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்துப் போடும்படியும், இந்த உத்தரவை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.