ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து ஈரோட்டில் சில அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது எனப் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் ஒரு தனியார் தோப்பில் திமுகவினர் சார்பில் ஒரு பிரமாண்டமான கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாக அங்கு கறி விருந்து நடைபெற்றுள்ளது. 'காதணி விழா யாழினி குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்' என மொட்டை பேனர் மட்டும் வைக்கப்பட்டு சுமார் 10,000 பேருக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினரிடம் அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியும் அதற்கான உரிய பதிலைத் தரவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக இதுகுறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை சிலர் மிரட்டி பதிவு செய்த காட்சிகளை அழிக்க வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.