![Ayyakkannu](http://image.nakkheeran.in/cdn/farfuture/qdz0JlG2ygYVKHShWZEvT8ihgqMfhiZPwO3UKtBDIhg/1546013828/sites/default/files/inline-images/602_11.jpg)
விளை நிலங்களில் மின்கோபுரங்களை அமைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க தமிழக ஆளுநரை சந்திக்க இன்று மாலை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு சென்றார். அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ஆளுநரை சந்திக்க வேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தோம். 28ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் மனு அளிக்க வந்தோம்.
இந்நிலையில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அய்யாக்கண்ணு என்ற பெயரை முதலில் அவர்கள் பார்க்கவில்லை. தற்போது பார்த்துவிட்டு எங்கே அய்யாக்கண்ணு திடீரென போராட்டம் நடத்திவிடுவாரோ என்று அனுமதி மறுத்துவிட்டனர். போராட்டம் நடத்துவோம் என்ற அச்சத்தால் மறுத்துவிட்டனர். இந்த ஜனநாயக நாட்டில் ஆளுநரை விவசாயிகள் சந்திப்பது குற்றமே இல்லை என்றார்.