சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் உள்ள உகான் நகரில் உருவாகி சீனாவை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத கிருமியால் அருகில் நின்று பேசக் கூட முடியாத நிலை உருவாகி உள்ளது. பல நாடுகளிலும் படிக்கவும், வேலைக்காகவும் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் வைரஸ் பரவிவிடாமல் தடுக்கும் விதமாக வெளிநாட்டு விமான போக்குவரத்துகளையும் முடக்கி உள்ளதால் அவர்களால் வரமுடியவில்லை. ஆனாலும் எங்களை அழைத்துச் செல்லுங்கள் என்று கண்ணீர் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள் கொடுத்து வருவதுடன் நோய்த் தடுப்பு முயற்சியாக ஆங்காங்கே மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் கிராமங்களில் உள்ள கடைகள், வீடுகளில் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தமிழர்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த கிருமிநாசினிகளான மஞ்சள், வேப்பிலை தண்ணீர், மாட்டுச் சாணம் தெளிப்பது போன்றவற்றை செய்யத் தொடங்கி உள்ளனர். அதாவது மஞ்சள், வேப்பிலை கிருமிகளை அண்டவிடாமல் விரட்டி அடிக்கும் அதனால் தான் இந்தக் கரைசலை பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சில டீ கடைகளில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் பேரல்களில் வைத்து வாடிக்கையாளர்கள் கைகள் கழுவவும் டீ கிளாஸ்கள் கழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து சிறிய பெரிய கடைகளிலும் சோப்புடன் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் உள்ள ஒற்றை டீ கடையில் கூட மாஸ்க் கட்டிக் கொண்டு டீ போடுகிறார் டீ மாஸ்டர். இப்படி கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.