
‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணர்வு பிரச்சார கலைக் குழுக்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது. பயிற்சி முகாமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் கலைத் திருவிழாவில் 'ஆத்தா உன் சேல' பாடல் பாடி பரிசு பெற்று மாவட்ட ஆட்சியர் முன்பு அதே பாடலைப் பாடி பாராட்டுப் பெற்ற ஆவுடையார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் காளிதாசன் மற்றும் அவரது சகோதரியான ஆவுடையார்கோயில் அரசு உயர்நிலைப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவி ஆனந்தி ஆகிய இருவரும் 'இல்லம் தேடி கல்வி' என்ற விழிப்புணர்வு பாடலை பாட மொத்த கலைஞர்களும் வியந்து பாராட்டினார்கள்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, “மாணவர் காளிதாசன் பாடிய ‘ஆத்தா உன் சேல’ பாடல் மனதிலிருந்து பாடியதால் இன்று அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இன்று அவரது சகோதரி ஆனந்தியுடன் இணைந்து விழிப்புணர்வு பாடல் பாடியது சிறப்பாக உள்ளது. இது போல மனதை கவரும்படி கலை நிகழ்ச்சிகளை கொண்டு போக வேண்டும். அப்போதுதான் நாட்டுப்புற கலைகள் மக்களிடம் எளிமையாக சென்றடையும். அதனால் நமது கலைகள் மூலம் மாணவர்களை ஈர்க்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் கரிசல் கருணாநிதி குழுவினரின் விழிப்புணர்வு பாடலை சிறப்பாக பாடிய மாணவ, மாணவியை மாவட்ட ஆட்சியர் பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகளையும் வழங்கினார். தொடர்ந்து கலைஞர்கள் பயிற்சி முகாமில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.