எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 வில் கல்வி, தனித்திறன்களில் சிறந்த மாணவர்களுக்குப் பெருந்தலைவர் காமராஜர் விருதுடன் ரொக்கப்பரிசு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குப் 'பெருந்தலைவர் காமராஜர்' என்ற பெயரில் விருது வழங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சிறந்த கல்விச் செயல்பாடு, தனித்திறன்களின் அடிப்படையில் மாணவ, மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு இந்த விருது வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி.யில் சிறந்து விளங்கும் 15 மாணவர்கள், பிளஸ் 2 வில் சிறந்து விளங்கும் மாணவர்களில் 15 பேர் என மாவட்டத்திற்கு மொத்தம் 30 பேருக்கு 'பெருந்தலைவர் காமராஜர்' விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். நடப்பு 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் இந்த விருது பெறும் மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறியது: தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குவது நடைமுறையில் இருக்கிறது. அப்போது, பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் 60 சதவீதத்திற்குக் கணக்கில் கொள்ளப்படும். மாணவர்களின் இணைச் செயல்பாடுகளுக்கு 40 சதவீத மதிப்பெண் வழங்கப்படும்.
கலை, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், கண்காட்சிகள், சாரணர், சாரணியர், என்.எஸ்.எஸ், ஜே.ஆர்.சி., சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு, என்.சி.சி. உள்ளிட்ட இணைச் செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நடப்புக் கல்வி ஆண்டில், பெருந்தலைவர் காமராஜர் விருதுடன் ரொக்கப்பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இதற்காக 1.72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்களுடைய பள்ளியின் சார்பில் குறைந்தபட்சம் ஒரு மாணவர், அதிகபட்சம் 3 மாணவர்கள் வரைத் தெரிவு செய்து விருதுக்குப் பரிந்துரைக்கலாம். தகுதி வாய்ந்த மாணவர்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு தெரிவு செய்யும். தகுதியான மாணவர்களைத் தெரிவு செய்து உடனடியாகப் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறினர்.