திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆறு வழி தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும், டைல்ஸ் லோடு ஏற்றி சென்ற லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் இருவர் உயிர் தப்பியுள்ளனர். ஆயுர்வேத மருத்துவராக இருக்கும் ஜோர்டன் இதுபற்றி கூறியதாவது, நான் எனது மனைவி அனு ஆகிய 2 பேரும் சவுதி பீரோ மெட்ரிக் தேர்வு எழுதுவதற்காக பெங்களூர் சென்று விட்டு திரும்ப பாலக்காடு செல்வதற்காக இந்த பஸ்ஸில் ஏறினோம். பஸ் டிரைவரின் எதிர்புறம் உள்ள பத்தொன்பது இருபது எண் கொண்ட சீட்டில் அமர்ந்து தூங்கிவிட்டோம். விபத்து நடந்தது எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாங்கள் கண் திறந்து பார்த்த பொழுது தான் இந்த எல்லா விவரங்களும் எங்களுக்கு தெரியவந்தது. எனக்கு மட்டும் லேசாக சிராய்ப்பு உள்ளது. என்னுடைய மனைவிக்கு ஒன்றும் ஆகவில்லை நாங்கள் மேல்சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு செல்ல உள்ளோம் என்றார்.
அதேபோல் இந்த விபத்தில் இரண்டு நாய்க் குட்டிகளும், ஒரு பூனைக்குட்டியும் சடலமாக மீட்கப்பட்டது. வளர்ப்புப் செல்லப்பிராணியாக கொண்டுவரப்பட்டதாக இருக்கலாம் என்றும் தெரிகிறது. விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது.