
தமிழ் கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு ரசித்த பின் மேடையில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., "தமிழக மக்களுக்கு வணக்கம்; ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் கலாசாரம், பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது; அது மதிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றைப் பாரம்பரியத்தைக் காக்க வேண்டியது என் கடமை. உங்களது உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும் ரசித்துப் பாராட்டவே வந்துள்ளேன்" என்றார்.
ராகுல் காந்தியுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு ரசித்த ராகுல் காந்தி சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.