Skip to main content

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஆட்டோ தொழிற்சங்கத்தினர்! (படங்கள்) 

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

சென்னையில் இன்று (24.07.2021) வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை மேற்கு, கிழக்கு ஆட்டோ தொழிற்சங்க தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (LPF) சார்பாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஆட்டோ தொழிற்சங்க தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை மாநிலச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடராஜன் பேசியதாவது, “ஒன்றிய பாஜக அரசின் மக்கள், தொழிலாளர் விரோத போக்கை மற்றும் ஜனநாயக விரோத போக்கைக் கண்டிக்கும் விதமாகவும், தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் இருக்கிற நிலையில், பெட்ரோல் 103 ரூபாய்க்கும், டீசல் 95 ரூபாய்க்கும் விற்பதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 2014ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தது. அன்று பெட்ரோலின் விலை 71.51 ரூபாயாக இருந்தது. இன்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 70 டாலராக இருக்கும்போது, பெட்ரோல் 103 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியாக 74 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டது. இந்த ஏழு ஆண்டுகளில் இது, சற்றேறக்குறைய 456 சதவீதம் உயர்ந்து 3 லட்சம் கோடியாக கலால் வரி வசூலிக்கப்படுகிறது. ஆகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை நுகர்வோர் அனுபவிக்கவிடாமல் செய்துவரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக நடைபெற்றுவருகிறது. இந்த விலையைக் குறைக்காவிட்டால் தொடர்ந்து பல இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்