ஆவடியை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாக்கியராஜ், அவருடைய நண்பர் பிரதீப் என்பவருடன் நேற்று (12.07.2021) வெளியே சென்றிருக்கிறார். அப்போது அயப்பாக்கம் கிரீன்கார்டன் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சாலையோரம் ஆட்டோவை நிறுத்திவிட்டு பாக்யராஜ் சென்ற நிலையில், அவ்வழியாக வந்த திருமுல்லைவாயில் காவல் நிலைய காவலர் சந்தோஷ் ஆட்டோவில் தனியாக அமர்ந்திருந்த பிரதீப்பை அழைத்து விசாரித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பாக்கியராஜ் திரும்ப வர இருவரையும் போலீசார் விசாரித்துள்ளனர். மேலும், காவல் நிலையத்திற்கும் அழைத்துள்ளனர். பாக்யராஜிடம் இருந்த செல்ஃபோனைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். செல்ஃபோனை தரும்படி பாக்கியராஜ் போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால் போலீசார் மறுத்ததால் பாக்கியராஜ் கீழே கிடந்த மது பாட்டிலை உடைத்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார். அப்போது, “முடிந்தால் நீ தற்கொலை செய்துகொள்” என காவலர் கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த பாக்யராஜ் மது பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர் சந்தோஷ் செல்ஃபோனை அங்கேயே போட்டுவிட்டு நகர்ந்துள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த பாக்கியராஜை அவரது நண்பர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பாக்கியராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், பாக்கியராஜின் தற்கொலைக்கு காவலர் சந்தோஷ்தான் காரணம் என அவரது உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பாக்யராஜின் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவலர் சந்தோஷிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், தற்போது தலைமைக் காவலர் சந்தோஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.