சுமார் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை அந்த மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15க்குள் நடத்தி முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழக தேர்தல் ஆணையம் அது சம்பந்தமான பணிகளில் முழுமூச்சில் இறங்கியுள்ளது. அப்படி தேர்தல் நடைபெறாத மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டமும் ஒன்று. தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தயாராகிவரும் நிலையில் கிராமப்புறங்களில் தலைவர் தேர்தல் பரபரப்பு இப்போதே ஆரம்பித்து விட்டது.
அதற்கு உதாரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகே உள்ளகரடி சித்தூர் கிராமம், இது சின்னசேலம் தாலுகாவில் அமைந்துள்ளது.கடந்த தேர்தலில் இந்த ஊராட்சியில் திமுகவை சேர்ந்தவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரவிருக்கும் தேர்தலில் அதிமுகவினர் தலைவர் பதவியை பிடிப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஊரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஓட்டுகளை முழுமையாக பெறுபவர் தலைவராக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் அந்த பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை வளைக்கும் வேலையில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் இறங்கியதோடு இந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ஏலத்தின் மூலம் தலைவரை தேர்வு என்பது குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.
இதற்கு ஊரில் உள்ள மற்றொரு தரப்பினர் ஏல முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் கச்சராபாளையம் காவல்நிலையத்திற்கு தெரியவந்தது உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கரடி சித்தூர் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் தேர்தல் சம்பந்தமாக ஏலம் விடுவதற்காக கூடியிருந்த கூட்டத்தினரை பார்த்து ஏன் எதற்காக கும்பலாக கூடி இருக்கிறீர்கள் என்று காவல்துறையினர் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர்கள் கோயில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக கூடிப் பேசி வருகிறோம் என்று பேச்சை திசை திருப்பி பதில் கூறிவிட்டனர். இதையடுத்து போலீசார் அதிக கூட்டத்தைக் கூட்டி எதுவும் முடிவு செய்யக்கூடாது என்று அனைவரையும் கலைந்து சென்று செல்ல அறிவுறுத்தினர். இதனால் கரடிசித்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி தலைவர் பதவியை முறைப்படி ஓட்டுப்போட்டு தான் தேர்ந்தெடுக்கவேண்டும் இப்படி மறைமுகமாக ஏல முறையில் தேர்ந்தெடுக்க கூடாது. அப்படி ஒரு வேளை நடந்தாலும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.