தென்காசி மாவட்டம் கடையநல்லூரின் ஒரே தெருவில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் ஒரு சிறுவன் உள்ளிட்ட 9 பேர், பாளையிலுள்ள, மேலப்பாளையத்தில் தங்கள் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பிற்பகல் ஊர் திரும்பினர். அவர்களின் வாகனம் கடையநல்லூரை நெருங்கிய ரயில்வே கேட் பக்கம் வந்தபோது, தகவல் மாவட்ட நிர்வாகத்திற்குச் சென்றது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவையடுத்து அந்த 9 பேரையும் கடையநல்லூர் சுகாதார ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், அவர்களை தனிமைப்படுத்த ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்துப் பகுதியிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். அதனால் ஆத்திரமடைந்த அத்தியூத்து மற்றும் சுற்றுப்புறத்தின் பொதுமக்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து தங்கள் பகுதியில் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்பாட்டுக்கு வந்த ஆலங்குளம் டி.எஸ்.பி. ஜாகிர் உசேன், தாசில்தார் பட்டமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்களை கல்லூரியில் தனிமைப்படுத்துகிற திட்டத்தை மக்கள் ஏற்கவில்லை. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள் 2 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர் தகவலறிந்து வந்த ஆலங்குளம் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி. ராஜேந்திரன் இருவரும் அவர்களை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தினர்.
பதற்றம் பரபரப்பான சூழலில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றிய அதிகாரிகள் பாவூர்சத்திரம் தனியார் கல்லூரியில் வைப்பதற்காகக் கொண்டு சென்றபோது, அங்கு திரண்டு வந்த பாவூர்சத்திரம், சிவகாமிபுரம், நாகல்குளம், பெத்த நாடார் பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவர்கள் பகுதியில் தனிமைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கும் வந்த எம்.எல்.ஏ. பூங்கோதை மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி அதிகாரிகளிடம் பேசினார். மக்களின் போராட்டத்தையடுத்து மீண்டும் அந்த 9 பேர்களை கடையநல்லூருக்கே வேனில் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ. பூங்கோதை, எங்கள் தொகுதி மக்களின் பாதுகாப்புதான் முக்கியம். கடையநல்லூரை சேர்ந்த அந்த 9 பேர்களும் அவர்களின் ஊரை நெருங்கியபோது அவர்களை, அவர்களின் சொந்தப் பகுதியில் தனிமைப்படுத்தாமல், அங்கிருந்து இங்கே ஏன் அதிகாரிகள் திருப்பிக் கொண்டு வர வேண்டும். மக்கள் கேள்வி கேக்கத்தானே செய்வார்கள். இதை நான் மாவட்ட நிர்வாக அதிகாரியிடமே கேட்டேன் என்றார்.
கரோனா பீதியிலிருக்கும் மக்கள் தங்களைச் சுற்றி நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.