தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்க புரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பாப்பா. கணபதி ஏற்கனவே காலமாகிவிட்டார். பிழைப்பின் பொருட்டு கூலி வேலை பார்த்து வாழ்ந்து வந்த பாப்பாவின் மகள், கேரளாவின் மூணாறு பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 02.11.2007ல் பாப்பாவின் பக்கத்து வீட்டுப் பெண் லட்சுமி என்பவரின் வீட்டில் இரண்டரை பவுன் நகை காணாமல் போக, அவரது புகாரின் அடிப்படையில் அப்போதைய புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் விமல்காந்த், எஸ்.ஐ.காந்திமதி ஆகியோர் அன்றைய தினம் மதியம் ஒரு மணியளவில் காசிலிங்க புரம் சென்று, சந்தேகத்தின் பேரில் பாப்பாவின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்கள்.
ஆத்திரத்தில் பாப்பாவின் வீட்டைச் சேதப்படுத்தியவர்கள், அங்கேயே பாப்பாவைத் தாக்கி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நகை பற்றிய விசாரணை என்ற பெயரால் பெண் என்று கூடப் பார்க்காமல் காவல் நிலையத்திலும் பாப்பாவை மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாப்பாவின் இரண்டு கைகளிலும், விரல்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்திருக்கிறார். அவரது நிலை கண்டு அரண்டு போன போலீசார் இரவு 8 மணியளவில் திரண்டு வந்த ஊர்மக்களிடம் பாப்பாவை ஒப்படைத்திருக்கிறார்கள். பின்னர் ஊர்மக்கள் பாப்பாவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மருத்துவமனையில் 22 நாட்கள் சிகிச்சையில் இருந்திருக்கிறார் பாப்பா.
பட்டியலினப் பெண் தாக்கப்பட்ட சம்பவம் என்பதால் அது குறித்து அப்போதைய கோவில்பட்டி கோட்டாட்சியரான சுடலைமணி விரிவாகவே விசாரித்திருக்கிறார். விசாரணையில் பாப்பாவை போலீசார் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்திருக்கிறார் கோட்டாட்சியர்.
இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட பாப்பா, நெல்லை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அவரது மனு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இதற்கிடையே இன்ஸ்பெக்டர் விமல்காந்த் ஏ.டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல் தலைமையிடத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தொடர்ந்து சென்னையிலேயே வசித்து வருகிறார். அதே சமயம் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய காந்திமதி பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் காவல் நிலையத்தில் தற்போது இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே இந்த வழக்கு நெல்லையிலிருந்து தூத்துக்குடி மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கினை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட மாஜி ஏ.டி.எஸ்.பி. விமல்காந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 26 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையில் 50 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பாப்பாவுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
இதுகுறித்து பாப்பாவின் வழக்கறிஞரான அதிசயகுமாரிடம் பேசியபோது, ''விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அன்றைய இரவு ஊர் முக்கியப் புள்ளிகள் இரண்டு பேரை வரவழைத்த போலீசார், அவர்களிடம் பாப்பாவை நல்ல முறையில் ஒப்படைத்ததாக எழுதியும் வாங்கியிருக்கிறார்கள். கோட்டாட்சியர் விசாரணையில் போலீசார் தாக்கியது உறுதி செய்யப்பட்டதால் அவரது அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதே அரசு உத்தரவிட்டது. அதனை மறைத்துவிட்டுத் தொடர்ந்து பணியில் இருந்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் வழங்கிய சிறப்பான முதல் தீர்ப்பு'' என்கிறார்.
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த தீர்ப்பு.