சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததை தட்டிக்கேட்ட காவலரை இளைஞர்கள் சிலர் பொது இடத்திலேயே தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கன்னங்குறிச்சிக்கு சென்ற காவலர் அசோக், இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சின்ன திருப்பதி என்ற பகுதியில், இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் வேகமாக வந்துள்ளனர். இதனைப் பார்த்த காவலர் அசோக் ஏன் இப்படி விதியை மீறி மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் உடன் வந்த மேலும் இருவரும் சேர்ந்து காவலர் அசோக்கை, பரபரப்பாக இருந்த சாலையிலேயே வைத்து சரமாரியாகத் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த காவலர் அசோக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கன்னங்குறிச்சி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர். மேலும் ஒரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் காவலர் அசோக் பொது வெளியில் இளைஞர்களால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.