தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக, மொத்தம் 22 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கினார். அந்த வகையில், கடந்த வாரம் கோவை மாவட்டம் வால்பாறையில் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது, மக்களை சந்தித்துப் பேச வாகனத்தில் ஏறும்போது அண்ணாமலையின் வலது கையில் அடிப்பட்டது.
இதையடுத்து, வாகனத்தில் ஏறிய பிறகு வலது கை கட்டை விரலை உதறிய படியே மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார். அண்ணாமலையின் கையில் அடிப்பட்டதை அடுத்து, அருகில் இருந்த பா.ஜ.க பொதுச் செயலாளர் முருகானந்தம் கட்சித் தொண்டர்களிடம் ‘பேண்டேஜ்’ வாங்கி வரச் சொன்னார். சில நிமிடங்கள் கழித்து, கட்சித் தொண்டர்களும் பேண்டேஜ் வாங்கி வந்தனர்.
அண்ணாமலை, அடிப்பட்ட தனது வலது கையால் மைக்கைப் பிடித்து ஆவேசமாக மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். உடனே, அருகில் இருந்த முருகானந்தம் அண்ணாமலையின் இடது கை ஆள் காட்டி விரலில் பேண்டேஜ் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இதற்கு அண்ணாமலையும் எதுவும் சொல்லாமல் உரையாற்றிக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.