ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம், சத்தி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வளாகத்திலேயே, வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 5-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, ஏ.டி.எம். எந்திரத்தின் மீது பெரிய கல்லினை போட்டு உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். அப்போது, ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்ட எச்சரிக்கை மணி ஒலித்ததால், அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதையடுத்து, ஏ.டி.எம் மையத்தில் எச்சரிக்கை ஒலி வருவதை கேட்ட அக்கம்பக்கத்தினர், ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு, போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் பேரில், ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களும் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த மர்ம நபரின் கை ரேகைகளை சேகரித்தனர்.
மேலும், ஏ.டி.எம் மையத்தின் எச்சரிக்கை மணி ஒலித்ததால், ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த ரூ.10 லட்சம் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஏ.டி.எம். மையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில், ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தறிபட்டறை தொழிலாளியான ஈரோடு அசோகபுரம் ஐயங்காடு பகுதியைச் சேர்ந்த ராகுல்(21) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு ராகுலை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். கைதான ராகுல் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.