தர்மபுரி அருகே, எழுதப் படிக்கத் தெரியாத முதியோரிடம் ஏ.டி.எம். அட்டைகளைப் பெற்று, நூதன முறையில் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து பணத்தை சுருட்டிய ஓசூர் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் எழுதப் படிக்கத் தெரியாத மற்றும் முதியோரை ஏமாற்றி, ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் அப்பாவிகளிடம், மர்ம நபர்கள் அவர்களின் ஏ.டி.எம். அட்டையின் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்றுக்கொள்கின்றனர். ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துத் தருவதுபோல் நடிக்கின்றனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அட்டை வேலை செய்யவில்லை எனக்கூறி, அவர்களிடம் வேறு ஒரு அட்டையை கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.
அப்பாவி மக்கள் அதை நம்பி அங்கிருந்து கிளம்பிச் சென்றதும், மோசடி கும்பல் வேறு ஒரு ஏ.டி.எம். மையத்திற்குச் சென்று ஏமாற்றிப் பெறப்பட்ட ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுத்துச் செல்வது தொடர்கதையாக இருந்தது. இதுபோன்ற மோசடிகள் குறித்து பாலக்கோடு டிஎஸ்பி சிந்துவுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஏ.டி.எம். மோசடி கும்பலை தேடி வந்த நிலையில், மார்ச் 5ம் தேதி காலை, பாலக்கோடு பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர் ஒருவர் இருப்பதாக டி.எஸ்.பி.க்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி. மற்றும் காவலர்கள் அங்கு சென்று சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரித்தனர். அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதியார் நகரைச் சேர்ந்த ரவி (36), வெல்டிங் பட்டறை தொழிலாளி என்பது தெரியவந்தது.
அவர்தான் அந்தப் பகுதியில் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் பாமர மக்களை ஏமாற்றி ஏ.டி.எம். அட்டையில் இருந்து பணம் பறித்து வந்ததும், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட அப்பாவிகளை ஏமாற்றி 2 லட்சம் ரூபாய் வரை ஏ.டி.எம். அட்டை மூலம் பணம் பறித்து இருப்பதும், அந்தப் பணத்தில் புதிதாக பிரிட்ஜ், சோபா செட், எல்.இ.டி. டிவி, மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ரவியிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏமாற்றி சுருட்டிய பணத்தில் வாங்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், ரவி மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர், பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது ரவி மட்டும்தானா அல்லது வேறு சில நபர்களும் இருக்கிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.