தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
மொத்தம் 13 சட்டமன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று கூடிய கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய மூன்று கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு கூட்டத்திற்கான தேதியை சபாநாயகர் அப்பாவு விரைவில் அறிவிப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.