வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. அதேபோல் தேர்தல் ஆணையம் சார்பிலும் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தீவிர ஆலோசனைகள் சூடுபிடித்துள்ளன. தகவல்களின்படி ஏப்ரல் மாத இறுதியில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (18.02.2021) மாலை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இரண்டு கூடுதல் இணைத் தேர்தல் அதிகாரிகளைத் தமிழக அரசு நியமித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலைமை தேர்தல் அதிகாரியுடன் இணைந்து பணியாற்ற இணை அதிகாரிகள் சேர்க்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். அதன்படி வேளாண்துறை இணைச்செயலாளராக இருந்த ஆனந்த் ஐ.ஏ.எஸ், சுகாதாரத்துறையின் இணைச் செயலாளராக இருந்த அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கூடுதல் இணைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.