பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போட்டியில் நான்காம் சுற்றின் இறுதி வரை 414 காளைகள் களம் கண்டன. 16 காளைகளை அடக்கி மணி என்பவர் முதல் இடத்திலும் 11 காளைகளை அடக்கி ராஜா இரண்டாவது இடத்திலும் 9 காளைகளை அடக்கி அரவிந்த் மற்றும் வாஞ்சிநாதன் ஆகியோர் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
இந்நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்த அரவிந்த் ஒரு காளையைப் பிடிக்க முற்பட்டபோது காளை அவரை முட்டியது. இதனால் படுகாயமடைந்த அரவிந்த் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சென்னையில் அரவிந்த்தின் தந்தையும் சகோதரரும் வேலை பார்த்து வந்த நிலையில், சொந்த ஊரில் தாயுடன் வசித்து வந்தார் அரவிந்த். உயிரிழந்த அரவிந்த்தின் தாயாரை செய்தியாளர்கள் சந்தித்த போது பேசிய அவர், “நான் வேணாமுன்னு சொல்லியும் எம்புள்ள நான் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனான். 25 வயசு முடிஞ்சு 26 வயசு இந்த மாசம் ஆரம்பிக்குது. என் புள்ளைக்கு பொண்ணு பாக்க சொல்லிட்டேனே. அவனும் சரின்னு சொன்னானே” என அந்தத் தாயின் அழுகுரல் காண்போரையும் கலங்க வைத்தது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த்திற்கும் திருச்சி சூரியூரில் மாடு முட்டி உயிரிழந்த பார்வையாளர் அரவிந்த்திற்கும் தமிழக அரசு சார்பில் 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.