கலைஞர் நலமுடன் இருக்கிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (26-09-2017) சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
செய்தியாளர்: தலைவர் கலைஞர் நலமுடன் இருக்கிறாரா?
மு.க.ஸ்டாலின்: தலைவர் கலைஞர் நலமுடன் இருக்கிறார். உங்களால் தேவையில்லாமல் ஒரு வதந்தி பரவி விட்டது. அவ்வுளவுதான்.
செய்தியாளர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி பல அமைச்சர்கள் வேறு வேறு கருத்துகளை சொல்லி வருவதால், இந்தப் பிரச்னையை மறைத்து, திசை திருப்ப இப்படிப்பட்ட வதந்திகள் பரப்பப்படுவதாக சொல்லப்படுகிறதே?
மு.க.ஸ்டாலின்: இதுபற்றி வதந்திகளைக் கிளப்பி வருபவர்களிடம் தான் நீங்கள் சென்று கேட்க வேண்டும். எத்தனை வதந்திகளை, எப்படியெல்லாம் கிளப்பினாலும் அவர்கள் செய்துள்ள குற்றங்களுக்கு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். அது மிக விரைவில் நடக்கும். அதுமட்டுமல்ல, இந்த வதந்தியைப் பரப்பியதில் ஊடகத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். காரணம், உங்கள் வழியாகத்தான் அதிகளவு வதந்தி பரவியிருக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.