அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியிலிருந்து கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பயனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்த சுமார் 4000 திருநங்கைகளின் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
21 வயதுக்கு கீழ் உள்ள திருநங்கைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக திருநங்கைகள் வேதனை தெரிவித்திருந்தனர். விண்ணப்ப படிவத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கான பிரிவு இல்லை என்று இ-சேவை மையத்திலிருந்து தெரிவிக்கின்றனர்.வாழ்வாதாரத்திற்காக யாசகம் எடுக்கும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் திருநங்கைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருநங்கைகளின் விண்ணப்பங்கள் காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதற்கு பின்பாக தங்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சமூக நல துறையின் சார்பாக எங்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள், வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. நாங்களும் பெண்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் எங்களுக்கும் இந்த திட்டத்தின் முழுமையான பயன் கிடைக்க வேண்டும். இதனை செயல்படுத்துவதற்கு தமிழக அரசும், தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநங்கைகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.