திருச்சி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நூலகர் தின விழா சிங்காரத்தோப்பில் உள்ள மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தற்போது வரை செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு (standard operating procedures) பணிகளை மேற்கொண்டுவருகிறோம். மாஸ்க் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, குழந்தைகளை எப்படி இடைவெளி விட்டு அமரவைக்க வேண்டும் என்பன போன்ற முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறோம். பொது சுகாதாரத்துறையிடமும் ஆலோசனைகள் கேட்டுள்ளோம். அவர்கள் கூடுதலாக ஆலோசனைகள் வழங்கினார்கள் என்றால் அதையும் நாங்கள் கடைப்பிடிக்க உள்ளோம்.
9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்துவருகிறோம். ஆசிரியர்கள் எவ்வளவு பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் என்ற விபரங்களைப் பெற்றுவருகிறோம். அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்குத் தகுந்தார் போல் ஆசிரியர்கள் கூடுதலாக நியமனம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 150 மாணவர்கள் அமர்ந்து படித்துவந்த வகுப்பறையில் தற்போது 350 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்கிற செய்தி எல்லாம் வந்துள்ளது. எனவே மாணவர்கள் சேர்க்கைக்குத் தகுந்தார்போல் பள்ளியின் கட்டமைப்பைக் கண்டிப்பாக மேம்படுத்துவோம்” என்றார்.