அரியலூர் அருகே உள்ள வெள்ளூரில் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஞ்சநேயர் சிலை ஒன்று திருடு போனது. இது குறித்து அரியலூர் காவல் நிலையத்தில் அப்போது ஊர் மக்கள் புகார் அளித்தனர். இது சம்பந்தமான வழக்கு தமிழக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. வெள்ளூர் கிராமத்தில் கொள்ளையடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆஸ்திரேலியா நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளதை கடும் முயற்சிக்குப் பிறகு கண்டுபிடித்தனர்.
இந்த சிலை கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது. அந்த சிலை நேற்று (09.05.2023) வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சிறை தடுப்பு பிரிவு ஏடிஜிபி சைலேஷ்குமார் தலைமையிலான போலீசார் ஒப்படைத்தனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் கோவிலில் களவாடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீண்டும் வந்து சேர்ந்ததைக் கண்டு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆஞ்சநேயர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஏடிஜிபி சைலேஷ் குமார் யாதவ் பேசுகையில், "தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்டு வடநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சிலைகளில் 23 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 64 சிலைகள் மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சிலைகளும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும்" என்று உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளூர் கிராம மக்கள் சிலையைக் கண்டுபிடித்து கொண்டு வந்து ஒப்படைத்த காவல்துறையினருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.