அரியலூர் மாவட்டம், வரலாற்று புகழ்பெற்ற திருமழபாடி கிராமத்தில் வைத்தியநாத சுவாமி கோயில் எதிரில் இந்திய வரைபடத்தை வரைந்து, அதில் நான்கு திசைகளிலும், மூலைக்கு ஒன்று வீதம் நான்கு குழந்தைகளை அமரவைத்து பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில், ஐந்து குத்து விளக்கினை ஏற்றி இந்தியர்கள் விரைவில் கரோனா பாதிப்பிலிருந்து நலம் பெற வேண்டும் என இயற்கை அன்னையிடம் பிரார்த்தனை செய்தனர்.
இந்தப் பிரார்த்தனையில் தொடர்ந்து மக்களை காக்க, அன்றாடம் காய்கறிகள், உணவு உற்பத்தி செய்து தருகின்ற விவசாயிகள் நலம் பெற வேண்டும் எனவும், இரவு பகலாக அர்ப்பணிப்போடு பணிபுரியும் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வருவாய் துறையினர், பத்திரிகை ஊடக நண்பர்கள், தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய கூலித்தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள், தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அன்றாடம் உதவிகளை செய்து வரும் அனைவரும் நலமாக வாழ வேண்டும் என இயற்கை அன்னையிடம் பிரார்த்தனை செய்தனர்.
இந்த வரைபடத்தை ஓவியர்கள் பாளையபாடி மாரியப்பன், கண்டராதித்தம் சங்கர், அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், திருமழபாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அகிலன் ஆகிய நால்வரும் வரைந்தனர்.