அரியலூர் பெண்ணாடம் சாலைகளில் அதிக வேகத்தடைகள் இருப்பதாகவும் அது வாகன ஓட்டிகளை பாதுகாப்பதாக இல்லை என்றும் செந்துறை ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, “அரியலூர் - செந்துறை - ஆர்.எஸ்.மாத்தூர் - பெண்ணாடம் செல்லும் சாலையின் தூரம் 44 கி.மீ. அந்த சாலையில் 55 வேகத்தடைகள் உள்ளன. ஆர்.எஸ்.மாத்தூரில் இருந்து பெண்ணாடம் வரை உள்ள 13கிமீ. தூர சாலையில் மட்டும் 24 வேகத்தடைகள் உள்ளன.
அரியலூரில் இருந்து பெண்ணாடத்திற்கு பேருந்து செல்ல 3 மணி நேரம் ஆகிறது. கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றால் 2 மணி நேரம் ஆகிறது. அவசியமற்ற இடத்திலெல்லாம் வேகத்தடை போடப்பட்டுள்ளது.
வேகத்தடையானது இந்திய தரைவழி போக்குவரத்து துறை அறிவித்துள்ள விதிமுறைப்படி 10 சென்டிமீட்டர் உயரமும், 3 மீட்டர் அகலமும் இருக்க வேண்டும். அப்படியும் அமைக்கப்படவில்லை. பெரும்பான்மையாக போடப்பட்டுள்ள வேகத்தடை செங்குத்தாக 15 சென்டிமீட்டர் முதல் 25 சென்டிமீட்டர் வரை உயரம் உள்ளது. இதனால் வேகத்தடையை கடந்து செல்லும் வாகனங்கள் வேகத்தடையில் தரையில் தட்டும்போது விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் இந்த வேகத்தடைகளிலோ அல்லது அருகிலோ வேகத்தடை இருப்பதற்கான எந்த எச்சரிக்கை குறியீடும் இல்லை.
இதனால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. விபத்தை தவிர்ப்பதற்காக போடப்படும் வேகத்தடைளே விபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் செங்குத்தான வேகத்தடையை கடக்கும்போது கரும்புகள் சரிந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த வேகத்தடைகளால் விபத்துகள் குறைந்துள்ளதாக கருத முடியாது. காரணம் சாலை விதியை மீரும் எந்த மனிதனும் விபத்தை சந்தித்தே ஆகவேண்டும். இந்த சாலையானது வாகனங்கள் செல்லும் சாலையாக உள்ளது. இதில் நடந்து செல்லும் மக்கள் மிகக்குறைவு.
எனவே சம்பந்தபட்ட துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து அரியலூர் - செந்துறை - ஆர்.எஸ்.மாத்தூர் - பெண்ணாடம் சாலையில் அவசியமற்ற வேகத்தடைகளை எடுக்க வேண்டும். அவசியப்படும் வேகத்தடைகளிலும் அதன் அருகிலும் எச்சரிக்கை குறியீடுகள் பொருத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.