Skip to main content

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து தகராறு; அரசு பேருந்து நடத்துநரிடம் விசாரணை

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

Argument with passenger for refusing to buy Rs 10 coin; Interrogation with government bus operator

 

சேலத்தில் பயணியிடம் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து தகராறில் ஈடுபட்ட அரசுப்பேருந்து நடத்துநரிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

இந்திய ரிசர்வ் வங்கி தாளில் அச்சிட்ட ரூபாய்களை மட்டுமின்றி, அவ்வப்போது நாணய வில்லைகளாகவும் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்தில் இருக்கின்றன.

 

தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மாநிலத்தின் வேறு சில பகுதிகளிலும் பத்து ரூபாய் நாணயத்தை மட்டும் பொதுமக்கள், வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெற்றுக்கொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று யாரோ எப்போதோ கட்டிவிட்ட தவறான கதையால், இந்த நாணயத்தின் பயன்பாட்டை வெகுவாக பொதுமக்கள் குறைத்து விட்டனர்.

 

அதேநேரம் ரிசர்வ் வங்கி, பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும், அவற்றை வர்த்தக நடவடிக்கையில் மற்ற நாணயங்களைப் போல் பயன்படுத்தலாம் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும், மக்களிடம் இந்த அறிவிப்பு எடுபடவில்லை. எனினும், சென்னையில் இந்த நாணயம் தடையின்றி பயன்பாட்டில் இருக்கிறது.

 

இந்நிலையில், சேலத்தில் கன்னங்குறிச்சி முதல் சூரமங்கலம் ரயில் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்தில் நடத்துநர் ஒருவர் பயணியிடம் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொலி பதிவு, சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவியது.

 

இதுகுறித்து அரசுப்போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சேலம் எருமாபாளையம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர்தான் பயணியிடம் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வாக்குவாதம் செய்தது தெரிய வந்தது.

 

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து நடத்துநர் மணிகண்டனிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளை கனிவாக நடத்த வேண்டும் என்று அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என்றார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்