புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறையில் சில நாட்களாக தொடர் பிரச்சனைகளாகவே உள்ளது. அன்னவாசல் ஒன்றியத்தில் ஒரு அரசுப் பள்ளி உதவி ஆசிரியர் +2 மாணவ மாணவிகள் 5 பேரை மட்டும் கொடைக்கானலுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து 3 நாட்களாக விசாரணை நடந்துள்ளது. திங்கள் கிழமைக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக பெற்றோர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளைக்குள் நடவடிக்கை எடுப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். விரைவில் வழக்குப்பதிவு, பணியிடை நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல புதுக்கோட்டை நகரில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியராக பணி செய்த ரேவதி (40). இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்தநிலையில், ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என சக ஆசிரியர்கள் தன்னை கேலி கிண்டல் செய்வதாகக் கூறி ஒரு மாதம் விடுப்பில் சென்றிருந்தார். ஆசிரியை ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பள்ளிக்கு போனபோதும் மறுபடியும் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7ந் தேதி விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, “ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என சக ஆசிரியர்கள் என்னை கேலி கிண்டல் செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஆன்லைன் மூலம் எலி விஷம் வாங்கி சாப்பிட்டேன்” என்று கூறியுள்ளார். தனது மகள் ரேவதி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தந்தை மாணிக்கம் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.