கரோனா நோய் தொற்று அபாயத்தை தடுக்கும் நோக்கில், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் மாநகருக்குள் வந்து யாரேனும் தங்கியிருந்தால், அவர்களை பற்றிய தகவல்களை உடனடியாக மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆணையர் சதீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்லது சேலத்தை சொந்த ஊராகக் கொண்டு, வெளியிடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் உள்ளூர் திரும்பும் நபர்களால் கரோனா நோய் தொற்று அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து சேலம் மாநகர எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து, வெளியில் இருந்து வருவோரை கண்காணித்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்கள் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். பரிசோதனை முடிவுகளில் நோய் தொற்று இல்லை என்று உறுதியான பிறகே அவர்கள் மாநகருக்குள் உரிய இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் பகுதிகளை சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் திங்கள்கிழமை (மே 11) ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியது:
கடந்த ஏப். 27ம் தேதி முதல் மே 10ம் தேதி வரையிலான 14 நாள்களில், வெளிமாநிலங்களில் இருந்து 134 நபர்களும், வெளி மாவட்டங்களில் இருந்து 296 நபர்களும் என மொத்தம் 430 பேர் சேலத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 345 பேருக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
பரிசோதனைகள் முடிவில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதன் பேரில், அவர்கள் சேலம் மாநகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 85 நபர்களை தனிமைப்படுத்தும் பகுதியில் அனுமதித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலேயே சமுதாய சமையல்கூடம் அமைத்து, மருத்துவ பரிசோதனைக்காக தனிமைப்படுத்தும் பகுதியில் அனுமதிக்கப்பட்ட 430 நபர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வழியாக தங்களது வசிப்பிடத்திற்கு செல்லும் பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த 1820 நபர்கள் என மொத்தம் 2250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரக்கூடியவர்கள் மற்றும் மாநகர பகுதியினை வசிப்பிடமாக கொண்டு பணி நிமித்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து வருபவர்கள், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் வருகை புரிவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு 0427 2212844 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
அவ்வாறு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும். ஒருவேளை, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாதபட்சத்தில் அவர்கள் கரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். பரிசோதனைகள் முடிவின் அடிப்படையில், அவர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள்.
மேலும், வெளியிடங்களில் இருந்து சேலத்திற்குள் வருகை தரக்கூடிய நபர்கள், தங்கியுள்ள நபர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், 4 மண்டலங்களில் உள்ள 60 கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து எவரேனும் மாநகர பகுதிளுக்குள் வருகை புரிந்துள்ளனரா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தெரிவித்துள்ளார்.