சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செம்மர கடத்தல் ரவுடியான அ.தி.மு.க. அம்மா பேரவைச் செயலாளர் பார்தீப்பன் சமீபத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, 20 ஆண்டுகளாக சென்னையை அச்சுறுத்தி வந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் பட்டினப்பாக்கத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான இவர் மீது சென்னை புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், சைதாப்பேட்டை பூந்தமல்லி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. மேலும், ஆற்காடு சுரேஷ், 15 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர். ஆற்காடு சுரேஷ் மீது தமிழகத்தைத் தாண்டி ஆந்திராவிலும் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
கடந்த 2010ம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்ற வாசலில், மற்றொரு கூலிப்படை கும்பலின் தலைவனான சின்னா என்கிற சென்ன கேசவலு, அவரது வழக்கறிஞர் பகத்சிங் ஆகியோரை கொலை செய்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை கதிகலங்க வைத்தவர் இந்த ஆற்காடு சுரேஷ். அதேபோல கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல ரவுடி தென்னரசுவை, தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே அவரது மனைவி மைதிலியின் கண் முன்னே ஆற்காடு சுரேஷ் ரவுடி கும்பல் வெட்டி சாய்த்தது.
போலீசாரின் தொடர் நெருக்கடி காரணமாக புளியந்தோப்பு பகுதியில் இருந்து வெளியேறி கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திரா மாநிலத்திலும், திருவள்ளூர் மாவட்டத்திலும் பதுங்கி இருந்தபடி தனது ஆட்களை வைத்து சென்னையில் மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எழும்பூர் பத்தாவது நீதிமன்றத்தில் ஆற்காடு சுரேஷ் நேற்று ஆஜரானார். பின்னர் தனது நண்பர் மோகன், வழக்கறிஞர் அமல்ராஜ் ஆகியோருடன் பட்டினப்பாக்கம் லூப்சாலையில் காத்துக் கொண்டிருந்த நண்பர் மாதுவை பார்ப்பதற்காக காரில் சென்றார். அங்கு மது அருந்திவிட்டு, லூப் சாலையோரம் நின்று அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, காரில் வந்த ஒரு மர்ம கும்பல் ஆற்காடு சுரேஷ் மற்றும் மாதுவை சரமாரியாக வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர்.
படுகாயம் அடைந்த இருவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆற்காடு சுரேஷ் உயிரிழந்தார். அவருடன் வெட்டுப்பட்ட மாதுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தென்சென்னை பகுதியில் பிரச்சனை உள்ள நிலங்களை விற்றுத் தருவது போன்ற வேலைகளில் ஆற்காடு சுரேஷ் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரவுடி தென்னரசுவின் கொலைக்கு அவரது தம்பி பாம் சரவணன் பழிதீர்த்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.