Skip to main content

சொற்களில் புதைந்துள்ள வரலாறு - தொல்லியல் ஆய்வாளர் தகவல்

Published on 20/11/2023 | Edited on 20/11/2023

 

 archaeologist said that history is buried in words

 

பழங்காலம் முதல் பாறைகளிலும், பானைகளிலும் தமிழர்கள் பல குறியீடுகளைப் போட்டு வைத்துள்ளனர். திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தமிழ் மன்றம், டிசிகாப் மென்பொருள் நிறுவனம் இணைந்து பொருட்பால் கருத்தரங்கம் மற்றும் நித்திலம் இதழ் வெளியீட்டு விழாவை என்.ஐ.டி வளாகத்தில்  நடத்தின. டிசிகாப் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் சிதம்பரம், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, எழுத்தாளர் சொக்கன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

 

மன்றத்தின் தலைவர் அருண் பிரபாகர் வரவேற்றுப் பேசுகையில், “1969ல் தொடங்கப்பட்டு பொறியியலில் ஒரு தமிழ்த் தேடலாய், மாணவர்களுக்கிடையே தமிழையும் தமிழர் சார்ந்த வாழ்வியலையும் பறைசாற்றும் விதமாக அவர்களுக்கிடையே தமிழ் சார்ந்த போட்டிகள் மற்றும் கருத்தரங்கங்கள், தமிழ் தெரியாத மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புகள் போன்றவற்றை 54 ஆண்டுகளாக இம்மன்றம் நடத்தி வருகிறது” என்றார்.

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு சொற்கள் வழி வரலாறு தேடல் என்ற தலைப்பில் பேசியபோது, “அன்றிலிருந்து இன்று வரை நமது மரபு சிதையாமல் சொற்கள் மூலம் கடத்தப்பட்டு வருகிறது. மிகப் பழங்காலம் முதல் பாறைகளிலும், பானைகளிலும் தமிழர்கள் பல குறியீடுகளை போட்டு வைத்துள்ளனர். தமிழி எழுத்துகளும், தமிழின் வேர்ச்சொற்களும் உலகின் பல மொழிகளில் பரவியுள்ளன. தமிழின் சொற்கள் அனைத்தும் காரணச் சொற்கள் தான். காரணமின்றி எந்தச் சொல்லுக்கும் பெயர் இடப்படவில்லை. களரி, அயன், தென்புலம், பெனின்சூலா, போலிஸ், கடவுள் போன்ற ஆங்கிலத்தில் உள்ள பல சொற்கள் தமிழின் கொடை. 

 

4000 ஆண்டுகளுக்கு முன் இரும்பு காலத்தில் விளையாடப் பயன்படுத்திய வட்டச்சில்லு உள்ளிட்டவை இப்போதும் சிறுமியர் விளையாட்டில் உள்ளது. பழங்காலங்களில் மண் பானை பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வழக்கம் இன்றும் உலோகப் பாத்திரங்களிலும் பெயர் பொறிக்கும் பழக்கம் தொடர்கிறது. அகழாய்வு, கல்வெட்டுகளில் அறியப்படும் வரலாறு இன்றும் தமிழரின் பயன்பாட்டில் உள்ளது அதன் தொடர்ச்சியைக் காட்டுகிறது. பழந்தமிழ் மக்கள் வரைந்த பாறை ஓவியங்கள் வானியல் சார்ந்த சிந்தனையை வலியுறுத்துவதாகவும் அவற்றை பற்றிய மேலும் தேடல்கள் தொழில்நுட்பம் சார்ந்து அமைய வேண்டும்” எனவும் அதைத் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுங்கள் என மாணவர்களைக் கேட்டுக் கொண்டார். மன்றத்தின் பொதுச் செயலாளர் மாணவர் யுகேந்தர் நன்றி கூறினார்.

 

 archaeologist said that history is buried in words

 

இந்நிகழ்வில் மாணவர்களே எழுதி வடிவமைத்த தமிழ் மன்றத்தின் ஆண்டு இதழான நித்திலம் 23 வெளியிடப்பட்டது. தேசிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் தமிழ் அறிவை வளர்க்கும் பொருட்டு அவர்களுக்கிடையே வைக்கப்பட்ட விதை எனும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாகப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிகழ்வு முழுவதும் மாணவர்களாலேயே ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்