தமிழக அரசு உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
’’அரசு நிர்வாகத்தில் அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் ஊழலை ஒழிக்க உதவும் லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. ஜூலை 10க்குள் இது குறித்தான நடவடிக்கை பற்றிய அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு பணித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
லோக் ஆயுக்தா சட்டம் 2014ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று 4 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழக அரசு லோக் ஆயுக்தாவை அமைக்காமல் காலம் கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இயக்கங்கள், போராட்டங்கள் நடத்தியுள்ளது. சட்டமன்றத்திலும் வலுவான குரலெழுப்பியுள்ளது. மேலும் லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைக்க வேண்டுமென வலியுறுத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆட்சியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வருகின்றனர். அதிலிருந்து தப்பிக்கவே லோக் ஆயுக்தா அமைப்பதை காலம் கடத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு இனியும் காலம் கடத்தாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பினை மதித்து உடனடியாக தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.’’