Skip to main content

கருணை அடிப்படையில் 49 பேருக்கு பணி நியமன ஆணை!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Appointment order for 49 people on compassionate basis in Chidambaram

 

சிதம்பரம் கிளை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை திறப்பு விழா, பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 49 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் 14 பேருக்கு காலமுறை பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வரவேற்றார். தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ச.சி.சிவசங்கர், தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையை திறந்து பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசினர்.

 

விழாவில் அமைச்சர் ச.சி.சிவசங்கர் பேசுகையில், “கடந்த மாதத்தில் நூறு பேருந்துகளை சீரமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழக முதல்வராக அவர் பொறுப்பேற்று பின்பு புதிய வடிவில் புணரமைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து, இன்று மீண்டும் சீரான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. அதற்கான தொகையை தமிழக முதல்வர் வழங்குகிறார். கடந்த ஆண்டில் ரூ.1500 கோடியும், இந்த ஆண்டில் 2500 கோடியும் தொகை வழங்கப்படுகின்ற காரணத்தினால் நமது தொழிலாளர்களுக்கான, மாத ஊதியத்தை முதல் தேதியில் வழங்கும் நிலை ஏற்பட்டது. பக்கத்து மாநிலங்களில் 15 நாட்கள் மற்றும் 30 நாட்கள் கழித்து ஊதியம் பெறும் நிலை உள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், இருக்கின்ற நஷ்ட நிலைமையில் அதையெல்லாம் சரி செய்து முதல்வர் போக்குவரத்து துறையை காத்து கொண்டிருக்கிறார். 

 

அதே போல் புதிய 2000 பேருந்துகள் வாங்குவதற்கான நிதியை ஒதுக்கி அதற்கான டெண்டர் விடப்பட்டு, இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் புதிய பேருந்துகள் வரவுள்ளது. ஓட்டுநர், நடத்துநர்களின் மனக்குறை, பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், பணிச்சுமை அதிகமாக உள்ளது என்ற குறையை போக்கும் வகையில் புதிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணி அமர்த்துவற்கான ஆணை வழங்கி அரசு போக்குவரத்து கழகத்தில் முதல் கட்டமாக 685 பேர் நியமிப்பதற்கான ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டு, 11200 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்தவர்கள் தேர்வு பெற்று பிறகு மருத்துவம், உடல் தேர்வு சரி பார்த்த பிறகு பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. போக்குவரத்துக்கழக பேருந்துகளை மீண்டும் சீரமைக்கும் பணிக்கு தமிழக முதல்வர் நிதி ஒதுக்கி காத்து வருகிறார். அதே போல் பணிக்காலத்தில் இறந்து போன ஊழியர்களின் வாரிசு தாரர்களுக்கு சென்னையில் முதல்வரால் முதல் கட்டமாக பணி ஆணை வழங்கப்பட்டது. 

 

தற்போது இரண்டாவது கட்டமாக  இங்கு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில்  49 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்று மூன்று போக்குவரத்து கழகங்களில் அதே போன்று பணி ஆணை வழங்கப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடைபெறாமல் உள்ள பணிகள் எல்லாம், தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பணியில் இருந்து ஓய்வுபெறும் அன்றைக்கே பணப்பலன்களை வழங்க அதற்கான ரூ.1500 கோடி நிதியை வழங்கி, பணப்பலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தள்ளாட்டத்தில் இருந்த போக்குவரத்து கழகத்தை முதல்வர் சரி செய்து கொடுத்துள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் ஊதிய பேச்சுவார்த்தை பல முறை பேசப்பட்டு நிறைவேற்றப்படாமல் மூன்று ஆண்டுகள் முடிந்து இழுத்தடிக்கப்பட்டு, திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இளையவர், மூத்தவர் என்ற வித்தியாசம் இல்லாமல் வழங்கப்பட்ட ஊதிய நிலையை மாற்றி, மீண்டும் கலைஞர் ஆட்சி காலத்தில் நடந்தது போன்று மீண்டும் பே மெட்ரிக்ஸ் (pay Matrics) முறையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டு கூடுதல் நிதியை ஒதுக்கி பழைய முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது” என்றார்.

 

விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற மறைந்த முதல்வர் கலைஞர் ஆட்சியில் தான் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்திலிருந்து கடலூர் தனி மண்டலமாக பிரிக்கப்பட்டது. தற்போது வருமானத்தை ஈட்டித்தருவதில் முதல் மண்டலமாக கடலூர் மண்டலம் திகழ்கிறது. தொழிலாளர்கள் விபத்துகள் ஏற்படுத்தாமல் பணியாற்ற வேண்டும். அதற்காகத்தான் அரசு பணிமனைகளில் குளிரூட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் துறையாக போக்குவரத்து துறை செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தி வந்த நிலை மாறி, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்கள் கோரிக்கை வைக்காமலேயே, அவர்களது தேவைகளை நிறைவேற்றி வருகிறார்” என்றார்.

 

விழாவில் தொழிற்சங்கத் தலைவர் தங்க.ஆனந்தன், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார். கடலூர் கோட்ட பொதுமேலாளர் எஸ்.ராஜா நன்றி கூறினார்.  விழாவில் கிளை மேலாளர்கள் எஸ்.கிருஷணமூர்த்தி, வி.மணிவேல், உதவிப் பொறியாளர் ஆர்.பரிமளம், துணை மேலாளர் ரகுராமன், உதவி மேலாளர் சிவராமன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ்விஜயராகவன், நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகர், ஏஆர்சி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர், புவனகிரி ஒன்றிய திமுக செயலாளர் மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்