அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று (13/07/2022) கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் மற்றும் கட்சியின் அமைப்புச் செயலாளர்களை நியமித்து, அறிவித்துள்ளார். புதிய பொறுப்புகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வில் புதிதாக நியமித்த எந்த பொறுப்பும் கட்சி சட்டப்படி செல்லாது. ஏற்கனவே, பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது; தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், அ.தி.மு.க.வில் இன்று நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனம் செல்லாது. இன்று வரை தாம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தனது ஒப்புதல் இல்லாமல் அதிமுகவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.