Skip to main content

'கல்பனா சாவ்லா' விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

Applications invited for Kalpana Chawla Award-2021

 

துணிவு, வீர சாகசச் செயல்களுக்கான 'கல்பனா சாவ்லா' விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான 'கல்பனா சாவ்லா' விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர்கள்.

 

2021ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அரசுச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச்செயலகம், சென்னை - 600009 அவர்களுக்கு, 30/06/2021 க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருதுப் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு; முழு விபரம் வெளியீடு!

Published on 04/03/2024 | Edited on 05/03/2024
Full details release forTN Govt Film Awards Announcement 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மறுநாள் (06.03.2024) புதன்கிழமை மாலை 06.00 மணியளவில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழா உரையாற்றுகிறார். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். 

2015 ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள் : 

சிறந்த படத்திற்கான முதல் பரிசு : தனி ஒருவன், இரண்டாம் பரிசு : பசங்க 2, மூன்றாம் பரிசு : பிரபா, சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசு : இறுதிச்சுற்று, பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) : 36 வயதினிலே. 

2015 ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் : 

சிறந்த நடிகர்: ஆர். மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை : ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம் / 36 வயதினிலே), சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்), சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்), சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த உரையாடலாசிரியர்: இரா. சரவணன் (கத்துக்குட்டி), சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்தப் பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை), சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்), சிறந்த ஒலிப்பதிவாளர்: ஏ.எல்.துக்காராம், ஜெ.மஹேச்வரன்: (தாக்க தாக்க), சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்) : கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்), சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : பிரபாகரன் (பசங்க 2), சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்), சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்), சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே மற்றும் இறுதிச்சுற்று), சிறந்த தையற் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா), சிறந்த குழந்தை நட்சத்திரம்: மாஸ்டர் நிஷேஸ், பேபி வைஷ்ணவி (பசங்க 2), சிறந்த பின்னணிக் குரல் (ஆண்) : கௌதம் குமார் (36 வயதினிலே), சிறந்த பின்னணிக் குரல் (பெண்) : ஆர். உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று). 

Full details release forTN Govt Film Awards Announcement
மாதிரிப்படம்

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2014-2015 : 

சிறந்த இயக்குநர்: கே. மோகன் குமார், சிறந்த ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே), சிறந்த ஒலிப்பதிவாளர்: வி. சதிஷ் (கண்ணா மூச்சாலே), சிறந்த படத்தொகுப்பாளர்: ஏ.முரளி (பறை), சிறந்த படம் பதனிடுவர்: வி. சந்தோஷ்குமார் (கிளிக்).

Full details release forTN Govt Film Awards Announcement

மேலும் தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்தம் 39 விருதாளர்களுக்குக் காசோலையும். விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்குகிறார். இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள், திரையுலகத்தைச் சார்ந்த பிரமுகர்கள், நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.