நெல்லையின் பாளையங்கோட்டையிலுள்ள மனகாவலம் பிள்ளை நகரைச் சேர்ந்த பூதத்தான்(85). அடிப்படையில் கொத்தனார் வேலை பார்த்தவர். இவருக்கு அம்மா பொண்ணு, பார்வதி என்று இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். இரண்டாவது மனைவிக்கு முருகன் என்ற மகன், செல்வி என்ற மகள் உள்ளனர்.
இந்தநிலையில் பூதத்தானுக்கு வயது முதிர்வு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. தனக்கு சொந்தமான வீடு மற்றும் 8 சென்ட் இடத்தை விருப்பமின்றி தனது இரண்டாவது மனைவியின் மகன் முருகனுக்கு எழுதிக்கொடுத்தார். சொத்தை வாங்கிய மகன் வயது முதிர்ந்த தன் தந்தையைக் கவனிக்காமல் புறக்கணித்தார்.
நோயால் தவித்த பூதத்தான் தன் முதல் மனைவி மகனுடன் வாழ்ந்திருக்கிறார். மேலும் இதுகுறித்து முதியவர் பூதத்தான் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்தின் மூலம், தன்னைப் பராமரிக்காமல் தவிக்கவிட்ட மகனிடமிருந்து தன் வீடு மற்றும் 8 சென்ட் இடத்தை மீட்டுத் தர வேண்டும் என்று நோய்வாய்ப்பட்ட நிலையில் இந்த வீட்டினை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து கொள்வேன் என்றும் வழக்கறிஞர் ஜெனி மூலம் சப் கலெக்டர் மணிஷ் நாரணவரேயிடம் புகார் மனு கொடுத்தார்.
இதனடிப்படையில் சப் கலெக்டர் விசாரணை நடத்தி மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007 பிரிவு 23ன் படி பூதத்தான் மகன் முருகன் அவரது மனைவி பெயருக்கு மாற்றப்பட்டிருந்த 75 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் 8 சென்ட் இடம் கொண்ட சொத்து செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து சட்டப்படி பூதத்தான் பெயருக்கு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் மாற்றி ஒப்படைத்தார்.
வாழ்வு கிடைத்த பூதத்தான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தந்தையைத் தவிக்க விட்ட மகனுக்கு இது தான் சாட்டையடி. இந்த வழக்கை இரண்டே மாதத்திற்குள் முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட எனக்கு, தற்போது வயது முதிர்ந்தவருக்கு மீட்டுக்கொடுத்ததில் எனக்கு பெரிய ஆத்ம திருப்தி என்கிறார் வழக்கறிஞர் ஜெனி.
அடுத்தவருக்கு தாராளமாக அள்ளிக் கொடுப்பதைவிட, வயது முதிர்ந்த தாய் தந்தையரை அனாதை இல்லத்திற்கு அனுப்பாமலிருப்பதே ஒரு மகனுக்கு மிகப் பெரிய புண்ணியமாகும் என்கிறது வேதங்கள்.