தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மழையில்லாததால் தற்போது பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே கிணற்றில், ஆற்றில், ஏரியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து கருக தொடங்கிவிட்டன.
தை இறுதி அல்லது மார்கழியில் மழை வரும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். அதுவும் பொய்த்துவிட்டது. இதனால் தை மாதம் நாற்றுவிட்டு நடவு நட்ட விவசாயிகள் நொந்துப்போய்விட்டனர். நட்ட பயிர்கள் கழனியில் கருக துவங்கின. கதிர் வந்த பயிர்கள் பதறாகின.
இதுபற்றி விவசாயிகள் குறை தீர்வு கூட்டங்களில் விவசாயிகள் தெரிவித்தபோது அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. அவர்கள் தேர்தல் பணியில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தனர். தற்போது தேர்தல் முடிந்த நிலையிலும் அதிகாரிகள் விவசாயிகள் கோரிக்கை பற்றி கண்டுக்கொள்ளவில்லை.
இதில் அதிருப்தியான தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், ஏப்ரல் 25ந் தேதி மதியம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை தீடீரென முன்வைத்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மாவட்ட ஆட்சியர் ராமன் அலுவலகத்துக்கு சென்று தங்களது கோரிக்கை மனுவை தந்துவிட்டு வந்துள்ளனர்.
‘கோடைக்காலம்மென்றால் வறட்சி ஏற்படும். அதற்காகயெல்லாம் நிவாரணம் வழங்க முடியும்மா’ என நக்கல் அடிக்கிறார்களாம் வேலூர் மாவட்ட வேளாண்மைத்துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் என்கிறார் விவசாய சங்கத்தை சேர்ந்த ஒருவர்.