பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். இதில் ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் தொடர்பாகப் பேசிய பேச்சுகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருந்தது. அதே சமயம் இவர் மீது சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் தான், தெலுங்கு பேசும் மக்கள் குறித்த தனது பேச்சு திரிக்கப்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி நேற்று முன்தினம் (04.11.2024) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மக்கள் குறித்த தனது சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். இதற்கிடையே அகில இந்தியத் தெலுங்கு சம்மேளன இயக்கத்தின் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசுவது, மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக திருச்சியிலும் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் காவல் நிலையத்தில் இனம், மதம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பகைமையை வளர்ப்பது, பிற நபர்களுக்கு இடையே பகை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் இன்று (06.11.2024) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், “2 கோடி தெலுங்கு மக்களை நடிகை கஸ்தூரி புண்படுத்தியுள்ளார். மக்களிடம் தேவை இல்லாமல் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக நடிகை கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக வரும் 10ஆம் தேதி தமிழ்நாடு நாயுடு மகா ஜன சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.