மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடைய, 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஜெயலலிதா சொத்துகளின் மீது ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு உரிமை உண்டு. ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது,
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் தீபக், தீபா என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில், தீர்ப்பில் திருத்தம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை அளித்துள்ளது.
வேதா இல்லத்திற்கு தீபா செல்ல முயற்சிப்பதாக நீதிபதியிடம் அரசு தலைமை வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார். தீபா வேதா இல்லத்திற்கு செல்ல முயற்சித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என அரசு தரப்பு தெரிவித்திருந்தது. நிலம் கையகப்படுத்த நடவடிக்கை நடைபெறுவதால் பிரச்சனை ஏற்படும் என தீபா தரப்புக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.