நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கிய இடங்களான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமைச் செயலகம், சென்னை மாநகராட்சி கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் தேசியக் கொடியை நினைவுபடுத்தும் விதமாக மூவர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார். தற்பொழுது காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் 'அப்துல் கலாம்' விருது முனைவர் இஞ்ஞாசிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனராக இஞ்ஞாசிமுத்து உள்ளார். நாகை கீழ்வேளுரை சேர்ந்த இளவரசி என்பவருக்கு துணிவு, சாகசங்களுக்கான 'கல்பனா சாவ்லா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய அமுதா சாந்திக்கு 'சிறந்த சமூகப் பணியாளர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவுசார் குறை உடையவர்களுக்கான சிறப்புப் பள்ளியை செயல்படுத்தும் ரெனோசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த டாஃபே ரிஹாப் சென்டர் நிறுவனத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'உங்கள் தொகுதியில் முதல்வர்' விருது லட்சுமி பிரியாவுக்கு வழங்கப்படுகிறது. மகளிர் நலத்திற்காக சிறந்த சேவைக்கு தொண்டாற்றிய வானவில் அறக்கட்டளைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக முதலமைச்சரின் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாயும், ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாயும் பரிசு வழங்கப்படுகிறது. கருங்குழி பேரூராட்சிக்கு 10 லட்சமும், கன்னியாகுமரிக்கு ஐந்து லட்சமும் பரிசு வழங்கப்பட இருக்கிறது. முதலமைச்சரின் 'மாநில இளைஞர் விருது' விஜயகுமார், முஹம்மது ஆசிக், வேலுரை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகையைச் சேர்ந்த சிவரஞ்சனிக்கும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.