திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, கள்ளிமந்தயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்தச் சிறப்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமைத் தாங்கினார். இவ்விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு 2607 பயனாளிகளுக்கு ரூ.564.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். தமிழக முதல்வர் இதுவரை 208 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 14 மாதங்களில் தமிழகத்தில் இதுவரை 12.17 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயக் கடன், சிறு வணிகக் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன் என பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கும் திட்டங்களின் கீழ், வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 10 ஆண்டுகளில் தமிழகம் குடிசை இல்லா மாநிலமாக மாற்றும் வகையில் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி இருக்கிறார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆதி திராவிட நலத்துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அரசு மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ அந்த வகையில் செய்துகொண்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் ஏழு சட்டமன்ற தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது.
இன்று 2607 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிப்பறை, கல்வி, பேருந்து, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை போன்ற பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர், ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற வகையில் ஆட்சி செய்து வருகிறார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் பிற்படுத்தப்பட்ட 175 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்கு 130 பயனாளிகளுக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். தொகுதி முழுவதும் இருக்கின்ற ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து கலைஞர் பொற்கால ஆட்சியை நடத்தினார். அதுபோல் தற்போதைய தமிழக முதல்வரும் பொற்கால ஆட்சி நடத்திவருகிறார். தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின்பு ஒட்டன்சத்திரம் தொகுதி பரப்பலாறு அணை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு அரசாணை வெளியிடப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று பரப்பலாறு அணை தூர்வாரப்படும். விவசாயிகள் பொருட்கள் வைப்பதற்கு ரூ.5 கோடி மதிப்பில் குளிர்சாதன அறை கட்டப்பட்டு வருகிறது. மேலும் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் பத்து ஏக்கர் நிலப் பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.20 கோடி மதிப்பீட்டில் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. பழனியில் சித்தா கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன் சித்தா கல்லூரி நிறுவப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் கூட்டுறவுத் துறையின் மூலம் மன்னவனூர் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்திலேயே 11 இடங்களில் தொழில் பயிற்சி துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்த ஆண்டு தொழில் பயிற்சி துவங்கப்படவுள்ளது.
பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு வேலைக்கு ஒட்டன்சத்திரம் தொகுதியில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதுபோல் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.