அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜாராம் வீடு உள்பட 7 இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம். இவர் மீது பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து தேனியில் உள்ள இவரது உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
சென்னை, தேனியில் ராஜாராமுக்கு உரிய 7 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.20 கோடி மதிப்புள்ள 65 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடிக்கு சொந்தமான 6 இடங்களில் நடந்த சோதனையில் 74 ஆவணங்கள் மற்றும் ரூ.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், முன்னாள் துணைவேந்தர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.